Sunday, August 7, 2011

அம்மாவின் கையெழுத்து



நேர்க்கோட்டில் கோர்க்கப்பட்ட
குன்னிமுத்துக்களாக
அம்மாவின் மனசுபோல
சீரான எழுத்துக்கள்

செத்துப்போனவனின்
கபாலச் சிரிப்பென
கரடுமுரடாய்
என் கையெழுத்து
எனக்கு மட்டும்
ஏன் இப்படி
கழுத்தைச் சாய்த்து
கைகளை உதறி
சிணுங்கும் என்னிடம்
கையெழுத்து நல்லா இல்லேன்னா
தலையெழுத்து நல்லாயிருக்கும்
இலைகளெல்லாம் உதிர்ந்துபோன
மொட்டை மரத்தில்
ஒட்டியிருக்கும்
ஒரே ஒரு ஒற்றைப் பூவாய்
புன்னகையுடன் சொல்லும்
அம்மா!
அப்படியா
உனக்கு தலையெழுத்து
நல்லாயில்லையா?
உலகம் உருண்டையா
இல்லை சதுரம்தான்
என்று
குட்டைப் பென்சிலால்
கோடு கிழித்துக் காட்டும்
சுபாவம் எனக்கு.
என் கேள்விக்கெல்லாம்
கன்னத்தில் முத்தத்தைப்
பதிலாக்கி விடுவாள் அம்மா!
அந்தக் கணத்தில்
கேள்வி வீச்சின்
வீரியம் குறையும் தான்
மண்டை மண்டையாய்
எழுதியிருக்கிறாயே
டீச்சர்
உச்சி மண்டையில்
ஓங்கி அடிக்கும்போது
வலியோடு வேகமெடுக்கும்
அதே கேள்வி.
கெணத்துல
தண்ணி எறைக்கப்
போனியா?
கருப்பனோட
கொஞ்சப் போனியா?
வண்டி வண்டியா
ஒங்கப்பன்
சீர் கொடுத்துட்டான்
கல்லு கம்மல்ல
மினுக்கலேன்னா என்னடி
கழற்றிக் குடுத்தா
கொறஞ்சுப் போய்டுவியோ?
எல்லா இரவுகளிலும்
ஏதோ ஒரு
கேள்வியோடு
அம்மாவின் கதறலோடு
போட்டியிட்டு ஜெயிக்கும்
விளக்க மாத்து சப்தம்.
தேடிப் பிடித்து
குடிகார அப்பன்
கடிக்கும்
நல்லி எலும்பில்
கேட்கும்
என் அம்மாவின்
உயிர் ஓலம்.
கடைசியாய்
ஊரெல்லாம்
கடனை வச்சுட்டுப்
பொட்டப் புள்ளையோட
மூளியாய் விட்டுட்டுப்
போய்ட்டானே
அம்மாவைக்
கட்டியணைத்து
ஊர் கூடி
அழுத போது
கையெழுத்து கதை
உண்மைதான் என்று
உறுதியானது எனக்கு.

எப்படியும்
படித்துவிடு
படி அரிசிக்காகப்
படாதபாடுபட்ட
அம்மா
அல்லும் பகலும் சொன்னதில்
பட்டதாரியாகி
வேலையும் கிடைத்தது.

கூலி வேலைக்கு
உடல் நலத்தைக்
கூலியாகக் கொடுத்து
அம்மா
சிறுகச் சிறுகச்
சேர்த்து வைத்த
சிறுவாட்டுப் பணம்
தோடும் வளையலும்
காசு மாலையுமாய்
என்னுடம்பில்
மாறிய பிறகு
மாலையிட வந்தவன்
பத்தாங்கிளாஸ்
படித்திருந்தாலும்
பார்த்துக்கொள்வான்
என்று
அம்மா
கைபிடித்துக்
கொடுத்தாள்
கண்டிப்பாய்
என் தலையெழுத்து
நிமிர்ந்திருக்கும்
எனும் நினைப்பில்
நாலெழுத்துப் படிச்சுட்ட
தெனாவுட்டா?
நாலாவது நாளே
இன்னும் என் நினைவு
வங்கியில்
பத்திரப்படுத்தியிராத
என் கணவன்
என்ற
அந்த அந்நியன்
ஓங்கி அறைந்ததில்
உறுதியானது
பெண்களுக்கு
கையெழுத்து எப்படியிருந்தாலும்
தலையெழுத்து
ஒரே மாதிரிதான்!



2 comments:

  1. :( பாவப்பட்ட பெண்கள் பலரின் நிலை...

    கவிதை,வலியை அப்பட்டமாய்ச் சொல்கிறது.

    ReplyDelete
  2. ஒட்டு மொத்த தமிழகத்தின் பெண்களுக்கான நிலையை ஒரு வரியில் உணர்ந்தேன்..///பெண்களுக்கு
    கையெழுத்து எப்படியிருந்தாலும்
    தலையெழுத்து
    ஒரே மாதிரிதான்///

    நன்றி
    சித்ரவேல்

    ReplyDelete